|
வணக்கம்!
எண்ணங்கள் என்றுமே வலிமையானவை. அதற்கு செயல்வடிவம்
கொடுக்கும்பொழுதுதான் அதன் சிரமங்கள் தெரியவரும். அந்த எண்ண சிதறல்களை
வெளிப்படுத்த முடியாத சிரமத்தின் வெளிப்பாடே தமிழ்சிகரம் இணையதளம்.
வெகுஜன ஊடகம் சார்ந்த எல்லாருக்குமே ஒரு ஆற்றாமை உண்டு. நியாயமான கருத்துகளுக்கு
சிவப்பு கம்பளம் விரிக்க யாரும் இல்லையே என்ற ஏக்கத்தின் தாக்கம்தான் அது. அந்த
தாகத்தை பூர்த்தி செய்வது மட்டுமல்ல...
ஒரு
இணையதளத்தை இயக்கத்தெரிந்த சாமானிய மனிதனும் அடடா... இதைத்தானே நினைத்தோம் என்று
மெச்சுக்கிற வகையில் அவர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வதுதான் தமிழ் சிகரத்தின்
நோக்கம்.
இருளில் தான் நட்சத்திரங்கள் தென்படும். பயணிப்பதற்கு எதிரே நீண்ட பாதை விரிந்து
கிடக்கிறது. எங்களது பாதங்கள் விளிம்புவரை செல்வதற்கான உத்வேகமும் துணிவும்
மேலான ஆற்றலும் வாழ்வில் கிடைத்துள்ளது.
நல்லவற்றை பழமையாக்கி நகைப்புக்குரியவற்றை நாகரிகமாக்கி உண்ணுதலும் உறங்குதலும்
மட்டுமே செயலாய்போன இந்த சமூகத்திடமிருந்து நாங்கள் வேறுநிறம். இந்த மண்ணில்
சகல உன்னதங்களும் பூமியின் சதை பிளந்து வானப் பரப்பு முழுமையும் ஆக்கிரமிக்கும்
விருட்சமாய் சிலிர்த்தெழ தமிழ் சிகரம் இணைய இதழ் தன்னையே அர்ப்பணிக்கிறது.
சமூக நல நோக்கில் செயல்படுகிற காந்தி அறக்கட்டளையின் சார்பில் தமிழ் இதயங்களின்
ஆர்வத்தை போக்குகிற வகையில் தை 4ம் தேதி முதல் கவிஞர் கனிமொழி எம்.பி அவர்களால்
மகுடம் சூட்டப்பட்டு இணையத்தளத்தில் வலம் வந்துள்ளது தமிழ்சிகரம். ஒரு
சிகரத்திற்கு ஒரு சிகரம் மகுடம் சூட்டுவதுதானே பொருத்தம்.
உங்களது திறந்த மனம் அதில் மேலெழும்பும் நற்சிந்தனைகள் விமர்சனங்கள் எதுவாயினும்
எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களின் பகிர்வுதான் எங்களின் வளர்ச்சி.
காத்திருக்கிறோம் உங்களின் எண்ண பகிர்வுகளுக்காக...
கா. சசிகுமார் காந்தி,
நிர்வாக இயக்குனர்.
|