நீச்சல் போட்டியில் சாதிக்கும் பெண்களின் பட்டியல் நாளுக்கு நாள்
அதிகரித்துக் கொண்டே போகிறது. அந்தப் பட்டியலில் இடம்பெற்று பதக்கங்களை வாங்கி
குவித்துக் கொண்டிருப்பவர்களில் ஒருவர் சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த சுகன்யா.
நீச்சல்குளத்தில் இறங்கினால் பதக்கத்துடன்தான் கரையேறுகிறார். தேசிய, மாநில அளவில்
150-க்கு மேற்பட்ட பதக்கங்களை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அவர் கூறும்போது,
நீச்சல் உங்களுக்கு அறிமுகமானது...
நான் தற்போது கே.கே. நகர் பத்மா சேஷாத்ரி சீனியர் செகண்டரி பள்ளியில் 11-ஆம் வகுப்பு
படித்து வருகிறேன். மூன்றாவது வகுப்பிலேயே நீச்சல் கற்று நீந்தி வந்தேன். 8-வது
படிக்கும்போது மாநில அளவிலான போட்டியில் முதல் முறையாகக் கலந்துகொண்டு 200 மீ. `ப்ரீஸ்டைல்'
பிரிவில் மூன்றாவது இடம் பெற்றேன்.

நீச்சலில் வித்தியாசமான போட்டிகளில்
பங்கேற்றது உண்டா?
கடந்த ஜனவரியில் தேசிய உயிர் காத்தல் போட்டிகள் சென்னையில் நடைபெற்றன. அந்தப்
போட்டிகள் வித்தியாசமாக இருக்கும். அதில் பங்கேற்றது ஒரு புதுமையான அனுபவம்.
அப்போட்டியில் கடல் தண்ணீரில் சிறுபடகில் சறுக்கிச் சென்று `மீட்கும்' போட்டி, 4 ஜ்
50 தொடர் தடை நீச்சல் போட்டி, கடற்கரை ஓட்டம்- நீச்சல்- ஓட்டம் போட்டி, கடற்கரை `பிளாக்'
போட்டி ஆகியவற்றில் முதலாமிடம், 1 கி.மீ., 2 கி.மீ., கடற்கரை ஓட்டப் போட்டிகள்
இரண்டிலும் இரண்டாமிடம் பெற்றேன்.
தேசிய அளவில் நீங்கள் பெற்ற வெற்றிகள...
கேரளா மாநிலம் நிலாம்பூரில் 2005-ல் நடைபெற்ற சி.பி.எஸ்.இ. தேசியப் போட்டியில் 50
மீ. `பிரெஸ்ட் ஸ்ட்ரோக்' போட்டியில் முதல்முறையாக வெண்கலப் பதக்கம் வென்றேன். கடந்த
ஆண்டு நடைபெற்ற தேசியப் போட்டியில் 4 ஜ் 100 மீ. `ப்ரீஸ்டைல்' போட்டியில் வெள்ளிப்
பதக்கம் வென்றேன். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற
ஜுனியர் தேசிய நீச்சல் போட்டியில் நான் பங்கேற்ற தமிழக அணி 4 ஜ் 200 தொடர் நீச்சல்
போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றது.
இந்த ஆண்டு ஒரிசா மாநடலம் புவனேஸ்வரில் நடைபெற்ற தேசிய மகளிர்
விளையாட்டுத் திருவிழாவில் `குரூப்-1' பிரிவில் 4 ஜ் 100 தொடர் நீச்சலில் மூன்றாவது
இடம் பெற்றோம். சென்னையில் கடந்த 2007-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற சி.பி.எஸ்.இ.
பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில் 200 மீ. பட்டர்பிளை பிரிவில் இரண்டாமிடம் பெற்றேன்.
கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற இந்தியா- இலங்கை அழைப்பு போட்டியில் 200 மீ.
தனிநபர் `மெட்லி'யில் 3-வது இடம், 50 மீ. `ப்ரீஸ்டைல்' போட்டியில் 2-வது இடம்
பெற்றேன்.
போட்டிகள்- வெற்றிகளைத் தாண்டி நீச்சல் உங்களுக்குத்
தந்திருப்பது என்ன?
தன்னம்பிக்கை, தைரியத்தை நீச்சல் தந்திருக்கிறது. புத்துணர்ச்சியோடு படிக்க
முடிகிறது. தண்ணீரால் நேரும் ஆபத்தில் சிக்கியிருப்பவரைக் காப்பாற்ற முடியும். மாணவ-
மாணவிகள் அனைவரும் கட்டாயம் நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும்.