ஆக்டினோமைசெட்ஸ்
பாக்டீரியாவைப் பயன்படுத்தி, தீங்கு விளைவிக்கும் சில வகை பாக்டீரியாக்களால்
உருவாகும் நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கலாம் என்பதை மாணவி அபிநயா
கண்டறிந்துள்ளார்.
இதற்காக
`பயோ-ஆசியா' அமைப்பு அவருக்கு இளம் சிந்தனையாளர் விருது வழங்கி கவுரவித்துள்ளது.
பாக்டீரியாக்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று நன்மை தருவது, மற்றொன்று தீமை அளிப்பது.
அப்படி நன்மை செய்யும் பாக்டீரியாக்களில் ஒன்றான `ஆக்டினோமைசெட்ஸ் பாக்டீரியாவைப்
பயன்படுத்தி, தீங்கு விளைவிக்கும் சில வகை பாக்டீரியாக்களால் உருவாகும் நோய்களுக்கு
மருந்து கண்டுபிடிக்கலாம்'' என்பதைதான் சென்னை மாணவி அபிநயா கண்டறிந்துள்ளார்.

அடையார் ஸ்ரீ சங்கரா
சீனியர் செகண்டரி பள்ளியில், மத்திய கல்வி பாடத்திட்டத்தின்படி (சி.பி.எஸ்.சி.)
பிளஸ்-2 படித்து வருகிறார் அபிநயா. அப்பா பத்ரி, எல்.ஐ.சி. அதிகாரி. அம்மா அலமேலு
ஆசிரியை. ஒரே தங்கை அக்ஷயா. இந்த விருது குறித்து அவர் கூறும்போது;
சின்ன வயதில் இருந்தே
எனக்கு அறிவியலில் ஆர்வம் அதிகம். அதிலும் கண்ணுக்கு தென்படாத ஆயிரக்கணக்கான
உயிரினங்கள் இந்த உலகத்தில் வாழ்ந்து வருகின்றன. அவைகளைப் பற்றிய செய்திகளை
ஆர்வமுடன் தேடிப் படிப்பேன். இப்படியே உயிரிகள் மீதுள்ள ஆர்வம் என்னையும் ஒரு
அறிவியல் சிந்தனையாளராக வெளிப்பட வைத்தது.
சி.பி.எஸ்.சி.
பாடத்திட்டத்தின்படி பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு ஒரு செய்முறை தேர்வு
நடத்தப்படுவது வழக்கம். இந்த செய்முறைத் தேர்வை சற்று புதுமையான முறையில் ஆராய்ந்து
விளக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். அப்போதுதான் கடல் நீரில் உள்ள `மரைன்
ஆக்டினோமைசெட்ஸ்' என்ற வகை பாக்டீரியாவுக்கு ஒரு விசேஷ தன்மை இருப்பதை அறிந்தேன்.
உடனே எனது ஆராய்ச்சி படலம் தீவிரமானது.
அதாவது மரைன்
ஆக்டினோமைசெட்ஸ் பாக்டீரியா மக்களுக்கு நன்மை தரும் பாக்டீரியா வகையைச் சேர்ந்தது.
இதற்கு இருக்கும் சிறப்பு தன்மையின் மூலம் மனிதனுக்கு தீமை விளைவிக்கும் சில
பாக்டீரியா இனங்களை அழிக்க முடியும் என்ற உண்மையை அறிந்து ஆசிரியர்கள் முன்பு
செயல்முறை விளக்கமாகவும் காட்டினேன் என்றார்.

"எனது சிந்தனையில் உள்ள
உண்மையை அறிந்த ஆசிரியர்கள், இளம் அறிவியல் சிந்தனையாளர்களை தேர்ந்தெடுத்து விருது
வழங்கி கவுரவிக்கும் `பயோ-ஆசியா' என்னும் அமைப்பு வழங்கும் விருதுக்காக எனது
படைப்பையும், அதன் முழு விளக்கத்தையும் அனுப்பி வைத்தார்கள். இதுபோன்று இந்தியா
முழுவதிலும் இருந்து ஏராளமான மாணவர்களின் அறிவியல் படைப்புகள் இந்த விருதுக்காக
அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
அதில் சிறந்த 5 படைப்புகளை
வல்லுனர்கள் குழு ஏற்றுக் கொண்டு, அதுபற்றிய முழு விளக்கத்தை பெறுவதற்காக
ஐதராபாத்திற்கு அழைத்தது. இறுதியில் என்னுடைய படைப்பு யங் மைண்ட்ஸ் அவார்டுக்கு
தேர்ந்து எடுக்கப்பட்டது. இதை அறிவிக்கையில் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனேன்.
அறிவியல் துறை மாணவர்கள், விஞ்ஞானிகள் முன்பு இந்த விருது வாங்கியதை பெருமையாக
நினைக்கிறேன்,'' என்று நிறுத்தினார்.
ஆக்டினோ மைசெட்ஸ்
பாக்டீரியாவின் மூலம், தீய பாக்டீரியாக்களை அழிக்க முடியும் என்பதால் இந்த விதியை
பயன்படுத்தி நோய் எதிர்ப்பு மருந்துப் பொருட்களையும் தயாரிக்கலாம். எதிர்காலத்தில்
இதுதொடர்பாக விரிவாக ஆராய்ந்து மக்களுக்கு பயன்தரும் மேலும் பல கண்டுபிடிப்புகளை
நிகழ்த்துவதையே எனது லட்சியமாக கொண்டுள்ளேன்.