
தன்னுடைய
இரண்டரை வயதில் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டு தன்னுடைய கால்கள் செயல்
இழந்தாலும் மனம் முழுமையாக, தன்னம்பிக்கையுடன்,
உறுதியுடன் இருப்பதால் கண்டிப்பாக வாழ்க்கையில் வெற்றி பெறுவேன் என்று பெருமையுடன்
கூறுகிறார் சுரேஷ்.
ஈரோடு மாவட்டம்
கவுண்டச்சிப்பாளையம் ஊராட்சி வள்ளிபுரத்தான் பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ், தன்னுடைய
இரண்டரை வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டதால் கால்கள் இரண்டும் செயல் இழந்தது. தாய்
வசந்தி கைத்தறி ஓட்டிதான் சுரேசையும், அவரின் அக்கா தனலெட்சுமியையும் காப்பாற்றி
வந்தார்.

வீட்டின் அருகிலேயே உள்ள
பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்புவரை படித்த சுரேஷ் குடும்ப சூழ்நிலை காரணமாக அதற்கு
மேல் படிக்கமுடியவில்லை. பள்ளியின் எதிரிலேயே ஒரு பெட்டிக்கடை வைத்தார். தன்னிடம்
உள்ள தன்னம்பிக்கையையும், பள்ளிக்கூட மாணவ மாணவிகளையும் நம்பி கடையை நடத்தினாலும்.
எதையாவது சாதிக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்திருந்தார் சுரேஷ்.
அந்த குறிக்கோளையும்
நிறைவேற்றினார். தரையில் தவழ்ந்து செல்லும் சுரேஷ் சுமார் நான்கரை மணி நேரம்
தண்ணீரில் மிதந்து சாதனை படைத்துள்ளார். கொஞ்சம் கூட அசையாமல் மிதப்பதுதான் இவருடைய
மிகச் சிறந்த சாதனை.
இவரைப் பாராட்டி கவர்னர்
சுரிஜித சிங் பர்னாலா சமீபத்தில் சாதனையாளர் விருது வழங்கினார். சுரேஷ் ரத்ததான
முகாம்களில் கலந்து கொண்டு ரத்ததானம் அளித்துள்ளார். மேலும் இயற்கை உலகம் நாட்டு நல
நற்பணிமன்ற இயக்கத்தின் சார்பில் சமூகப் பணிகளில் ஈடுபட்டு இளைஞர்களையும் ஈடுபட
வைக்கிறார்.
இந்த
சாதனைகளுக்குரிய இளைஞரை நேரில் சந்தித்தோம்:

நான்
கடந்த நான்கு வருடங்களுக்கு முன்புதான் கிணற்றில் நீச்சல் கற்றுக் கொண்டேன்.
என்னால் நீச்சல் அடிக்க் முடிகிறதென்றால் நான் நினைத்தால்
எந்த சாதனையும் செய்ய முடியும் என்று தோன்றியது. அதற்கு என்ன செய்யலாம்
என்று யோசித்தபோதுத்தான் தண்ணீரில் மிதக்கலாமே என்று தோன்றியது.
அதற்கு முதலில்
மூச்சுப்பயிற்சி மேற்கொண்டேன். அதன்பிறகு சிறிது நேரம் மட்டும் தண்ணீரில் மிதக்க
ஆரம்பித்தேன். பிறகு படிப்படியாக மிதக்கும் கால அளவை அதிகரித்தேன்.
இப்போது 5 மணி நேரம் என்னால் தொடர்ச்சியாக தண்ணீரில் மிதக்க
முடியும்.
ஈரோடு வ.உ.சி. பூங்கா,
மேட்டூர் ஆகிய இடங்களில் நான்கரை மணிநேரம் மிதந்துள்ளேன். ஊனமுற்றோர் கூட்டமைப்பு
நடத்திய விருது வழங்கும் விழாவில் என்னையும் தேர்வு செய்து விருது வழங்கினார்கள்.
தமிழக
கவர்னர் சுர்ஜித சிங் பர்னாலா அவர்கள் கையால் அந்த விருதை நான் வாங்கியபோது எனக்குள்
ஒரு எண்ணம் தோன்றியது. கின்னஸ் சாதனை செய்ய நாம் முயற்சி
செய்யலாமே என்று. அதற்கான முயற்சிகளை நான் தற்போது செய்து வருகிறேன்.
வருங்காலத்தில் 12 மணிநேரம் மிதக்க முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளேன்.
நான் வசிப்பது ஒரு கிராமம்.
எனக்கு வெளியுலகத்தைப் பற்றிய அதிக விபரங்கள் தெரியாது. எனக்கு தற்போது
வழிகாட்டியாக இருப்பவர்கள் இயற்கை உலகம் நாட்டு நல நற்பணி மன்றத்தினர்தான்.
அம்மன்றத்தின் தலைவராக உள்ள பெரியசாமி, செயலாளராக உள்ள விஜயபாரதி மற்றும்
மன்றத்தினர் என்னுடைய முயற்சிகளுக்கு படிக்கட்டுகளாக இருந்து வருகிறார்கள் என்பது
குறிப்பிடத்தக்கது.
ஊனமுற்ற அனைவருக்கும் ஒரு
முன்மாதிரியாக வாழ வேண்டும் என்பதற்காக நான் கடுமையாக முயற்சிசெய்து வருகிறேன்.
கண்டிப்பாக வெற்றியும் பெறுவேன் என்று நம்பிக்கையாக சவால் விடுகிறார் சுரேஷ்.
சுரேஷின் கின்னஸ் சாதனைக்காக செய்யும் முயற்சிகள் வெற்றி பெற
வாழ்த்துவோம்.