புதுடெல்லி, மார்ச். 09: உலக கோப்பை ஆக்கிப்போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. “லீக்” முடிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் தலா 12 புள்ளிகள் பெற்றன. கோல் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா முதல் இடத்தையும், இங்கிலாந்து 2-வது இடத்தையும் பிடித்தன. இந்த 2 அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. ஸ்பெயின் அணி 9 புள்ளிகள் பெற்றது. அந்த அணி 5-வது இடத்துக்கான போட்டியில் மோதும்.
இந்திய அணி ஒரு வெற்றி, ஒரு டிரா, 3 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றது. கோல் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை முந்தியது. இதனால் இந்திய அணி 7-வது இடத்துக்கான போட்டியில் மோதுகிறது. தென்ஆப்பிரிக்கா 9-வது இடத்துக்கான போட்டியிலும், பாகிஸ்தான் 11-வது இடத்துக்கான போட்டியிலும் மோதும்.
“ஏ” பிரிவில் இன்று நடைபெறும் கடைசி “லீக்” ஆட்டங்களில் ஜெர்மனி- நியூசிலாந்து (மாலை 4.35 மணி), ஆலந்து- தென்கொரியா (மாலை 6.35), கனடா- அர்ஜென்டினா (இரவு 8.35) அணிகள் மோதுகின்றன. ஆலந்து அணி 10 புள்ளிகள் பெற்றுள்ளது. கோல் வித்தியாசமும் அதிகமாக இருப்பதால் அந்த அணி அரை இறுதியை உறுதி செய்துவிட்டது. ஜெர்மனி, கொரியா, நியூசிலாந்து இடையே போட்டி நிலவுகிறது. இன்றைய போட்டியில் ஜெர்மனி அணி நியூசிலாந்தை வென்றால் அரை இறுதிக்கு நுழைந்து விடும்.