ஒலிம்பிக்கில் தங்கம் வாங்குவதே எனது லட்சியம்: லட்சுமி பிரியா.
 

உடலின் உரமான வீரத்தை வெளிக்கொணரும் வீர விளையாட்டு பளு தூக்குதல். ஆண்களால் மட்டுமே சாத்தியம் என்றிருந்த இந்த விளையாட்டில் பெண்களும் இப்போது தூள் கிளப்பி வருகிறார்கள். இந்தியாவில் மல்லேஸ்வரி, குஞ்சராணி ஆகியோர் அதில் குறிப்பிடத்தக்கவர்கள். அந்த வரிசையில் நானும் வருகிறேன், என்கிறார் லட்சுமி பிரியா.

100- க்கும் மேற்பட்ட பதக்கம் மற்றும் கோப்பைகளை வென்றுள்ள இவர் குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள ஈச்சன்விளையைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி.

பளுதூக்குவதில் தேசிய அளவிலான போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அவர் ''இந்தியாவுக்கு ஒலிம்பிக்கில் எப்படியும் தங்கம் வென்று தருவேன்'' என்று நம்பிக்கையுடன் புன்னகை பூக்கிறார்.

பளு தூக்குதலில் 2 வகை. ஒன்று, ''ஸ்னாட்ச்''. அதாவது, ஒரே மூச்சில் எடையை கீழிருந்து மேலே தூக்குவது. அடுத்தது ''கிளீன் அண்ட் ஜெர்க்''. அதாவது, கீழே இருந்து எடையை தூக்கி தோளில் வைத்து, அதன்பிறகு தலைக்கு மேலே தூக்குவது.

இந்த 2 வகைகளிலும் அசகாய வீராங்கனையாக திகழ்கிறார், லட்சுமி பிரியா.பளு தூக்கும் போட்டியில் ஆர்வம், சாதனைகள் பற்றி அவர் கூறும்போது,

என்னுடைய அக்காள் லட்சுமி பிரபா, அண்ணன் பால பூபதி ஆகியோரும் பளு தூக்கும் சூரர்களே. அவர்களைப் பார்த்து எனக்கும் பளு தூக்குதலில் ஆர்வம் வந்து விட்டது. 4-ம் வகுப்பு படிக்கும்போது, அதாவது 9-வது வயதில் இருந்தே பளுதூக்க பயிற்சி எடுத்து வருகிறேன்.

தமிழ்நாடு பளு தூக்கும் சங்கம் சார்பில் மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான சப்-ஜூனியர்(48 கிலோ எடை பிரிவு) போட்டியில் 3-வது பரிசு பெற்றேன். அப்போது எனக்கு 10 வயது. பின்னர் 11-வது வயதில் சென்னையில் நடந்த போட்டியில் முதலாவது பரிசு பெற்றேன்.

இதைத்தொடர்ந்து பஞ்சாப்பில் நடந்த பள்ளிகளுக்கு இடையிலான முதலாவது தேசிய போட்டியிலும், கோவாவில் நடைபெற்ற அகில இந்திய ஊரக விளையாட்டு போட்டியிலும் 2-வது பரிசு பெற்றேன். இதன்பின்னர் கேரளாவில் நடந்த பள்ளிகளுக்கு இடையிலான 2-வது தேசிய போட்டியில் முதல் பரிசு பெற்றேன்.

அதிகபட்சமாக ஸ்னாட்ச் 50 கிலோ, ஜெர்க் 60 கிலோ எடை தூக்குவேன். என் தந்தை மற்றும் அண்ணன், அக்காதான் எனக்கு பயிற்சியாளர்கள். பள்ளி விட்டு வந்ததும் படிப்பேன். பிறகு இரவு 8 மணி முதல் குறைந்தது 2 மணி நேரம் பயிற்சி செய்வேன்.

என் குடும்பத்தினரே பயிற்சியாளர்கள் என்பதால் நினைக்கும் போது கூடுதல் பயிற்சி எடுத்துக் கொள்ள முடிகிறது. பயிற்சியின்போது ''ஜெர்க்'' செய்யும்போது சில நேரங்களில் காயம் ஏற்படும். ரத்தம் வழிந்தோடும். ஆனாலும் ஓய்வு எடுக்க மாட்டேன். தந்தையும் என்னை ஓய்வு எடுக்க அனுமதிக்க மாட்டார். தொடர்ந்து பயிற்சி செய்வேன்.

மல்லேஸ்வரியும், குஞ்சராணியும்தான் எனக்கு ரோல் மாடல். பயிற்சியின்போது அவர்களது படத்தை அடிக்கடி நான் பார்த்துக் கொள்வேன். அப்போது எனக்குள் ஒரு வேகம் பிறக்கும்.

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அனுமதி கிடைக்கும் பட்சத்தில் சந்தோஷப்படுவேன். ஒலிம்பிக்கில் நான் இந்தியாவுக்கு நிச்சயம் தங்கப்பதக்கம் வென்று வருவேன். ஒலிம்பிக்கில் தங்கம் வாங்குவதே எனது லட்சியம் என்று கூறுகிறார் லட்சுமி பிரியா.

 
நண்பருக்கு அனுப்ப
 
 
o நேரம் நமதாகட்டும்!
o நூறு ஆண்டு வாழ ஆசையா? விரைவில் வருகிறது மாத்திரை!
o விடுதலைப் புலிகள் - உலகத் தமிழர்களின் பன்னாட்டு முகவரி
o பருவநிலை பேச்சு வார்த்தை: அமெரிக்க அடிமையாக இந்தியா
o பொங்கல் - அறுவடைத் திருநாள்
 

 

 
 
Copyright © 2008 All rights Reserved By Tamilsigaram                                      Designed and Hosted by Vision Technologies