இந்திய பங்குச் சந்தை 2009 ஆம்
ஆண்டில் சில பின்னடைவை சந்தித்தாலும், எழுச்சியையே சந்தித்துள்ளது. அமெரிக்கா,
ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், பங்குச் சந்தைகளும்
நெருக்கடிக்கு உள்ளாயின. ஆனால் இதை சமாளித்து மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ்
2009 ஆம் ஆண்டில் 7,713.30 புள்ளிகள் (24.12.2009 நிலவரப்படி) அதிகரித்துள்ளது.
இதேபோல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 2,219.25 புள்ளிகள் ( 24.12.2009
நிலவரப்படி) அதிகரித்துள்ளது. (சென்ற வருடம் டிசம்பர் 31 ஆம் தேதி சென்செக்ஸ்
9,461.31 புள்ளிகளும், நிஃப்டி 5,178.40 புள்ளிகளும் இருந்தன.) அதே நேரத்தில்
பங்குச் சந்தை சரிவையும் கண்டுள்ளது. பிப்ரவரி 23 ஆம் தேதி சென்செக்ஸ் 8,613.50.,
நிஃப்டி 2,661.65 புள்ளிகளாக குறைந்தது.
இது குறித்து மும்பை பங்குச்
சந்தையின் முன்னாள் தலைவர் தீனா மேத்தா கூறுகையில், அமெரிக்க பொருளாதார
நெருக்கடியால், மற்ற நாடுகளிலும் ஏற்பட்ட நெருக்கடி, பணப்புழக்கம் குறைந்த
நிலையிலும் கூட, பங்குச் சந்தைகள் ஏற்றத்தை கண்டதுடன், முக்கிய பொருளாதார
அம்சங்களும் வளர்ச்சி அடைந்துள்ளன. இந்திய பங்குச் சந்தையில் இருந்து 2008 ஆம் ஆண்டு
அந்நிய முதலீடு வெளியேறியது. இதற்கு மாறாக 2009 ஆம் வருடம் கணிசமாக அந்நிய முதலீடு
வந்துள்ளது. ( அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 24-12-2009 நிலவரப்படி ரூ.23,556.24
கோடி பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளன.) இந்திய பங்குச் சந்தை 2009 இல்
வளர்ச்சி கண்டுள்ளது. இதில் பங்கு பெற பல உள்நாட்டு முதலீட்டாளர்கள் தவறிவிட்டனர்.
இதில் இருந்து நாம் கற்க வேண்டிய பாடம், பங்குச் சந்தையில் எப்போது முதலீடு
செய்யலாம் என்று காத்துக் கொண்டு இருப்பதை விட, அதன் மதிப்பு உயரும் போது முதலீடு
செய்ய வேண்டும்.
2008 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது
9.6 மடங்கு அதிகளவு வர்த்தகம் நடந்துள்ளது. இவற்றில் இருந்து 10 விழுக்காடு வருவாய்
கிடைத்துள்ளது. இது கடன் பத்திர சந்தைகளின் வருவாயை விட அதிகம் என்று தெரிவித்தார்.
புது வருடத்தில் (2010) பங்குச் சந்தையின் குறியீட்டு எண்கள் 2009 ஆம் ஆண்டை போல
அதிக அளவு உயராவிட்டாலும் கூட, பங்குச் சந்தையில் பதிவு செய்துள்ள நிறுவனங்களின்
வருவாய் அதிகரிக்கும். புது வருடத்தில் இந்திய நிறுவனங்களின் வருவாய் 16 முதல் 17
விழுக்காடு வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் பங்குச் சந்தை பாதிப்பில்லாமல்
மேல் நோக்கி அதிகரிக்கும். கடனுக்கான வட்டி குறைவாக இருப்பது, மொத்த உள்நாட்டு
உற்பத்தி மதிப்பில் கடன் விகிதாச்சாரம் குறைவாக இருப்பது, எல்லா பொருட்களின் விற்பனை
அதிகரிப்பது போன்றவை இந்தியா தொடர்ந்து வளர்ச்சி பாதையில் செல்லும் என்று உறுதியாக
கூறமுடியும்.
சாலை, துறைமுகம், விமான நிலையம்
போன்ற உள்நாட்டு அடிப்படை கட்டுமானத்தை விரிவுபடுத்துவது அரசின் முன்னுரிமை
திட்டமாக இருப்பதால், இந்த துறை அதிக அளவு வளர்ச்சி அடையும். இருப்பினும் உணவுப்
பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரிப்பதால் ஏற்படும் பணவீக்கம், மற்ற துறைகளையும்
பாதிக்கும். குறிப்பாக மக்களின் நுகர்வு சக்தி குறைவதால், உற்பத்தி சார்ந்த
தொழில்கள் பாதிக்க வாய்ப்பு உள்ளது. அத்துடன் அடுத்த வருடத்தில் சலுகைககள்
அறிவிக்கப்படாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. நிதி சந்தையில்
பணப்புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை எடுக்கும்
என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
வட்டி விகிதங்களை
அதிகரிக்காவிட்டாலும், வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதத்தை அதிகரிக்கும். இதனால்
நிதி சந்தையில் பணப்புழக்கம் குறைய வாய்ப்பு உள்ளது. இந்தியாவைச் சேர்ந்த 20 பங்குச்
சந்தை புரோக்கர்கள், முதலீட்டு நிறுவனங்களிடம் சென்ற வாரம் எடுத்த கருத்துக்
கணிப்பில் இருந்து, 2010 ஆம் ஆண்டின் நடுவில் சென்செக்ஸ் 18,375 புள்ளிகள் என்ற அளவை
எட்டுவதுடன், வருட முடிவில் 19 ஆயிரத்தை தொடும் என்று கூறியுள்ளனர். இதை விட
அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கிம் இன்ஜ் செக்யூரிட்டிஸ் என்ற முதலீட்டு நிறுவனத்தின்
துணைத் தலைவர் ஜிகார் ஷா தெரிவித்தார். இவர் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைவதுடன்,
தொழில், வர்த்தக நிறுவனங்களின் வருவாயும் அதிகரிக்கும்.
இதனால் அடுத்த வருடம் மத்தியில்
சென்செக்ஸ் 21 ஆயிரம் புள்ளியை தொட வாய்ப்பு உள்ளது என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இதிலிருந்து மாறுபட்ட கருத்துக்களும் உள்ளன. அரசின் சலுகைகள் திரும்ப பெறுவது,
பருவமழை தவறியதால் ஏற்பட்டுள்ள உணவு தானிய உற்பத்தி சரிவு போன்றவை பங்குச் சந்தையை
பாதிக்கலாம். இது குறித்து கேஆர்ஐஎஸ் ஆய்வு நிறுவத்தின் இயக்குநர் அருன் கிரிஜ்வால்
கூறுகையில், பங்குச் சந்தையின் முன்னேற்றமும், வளர்ச்சியும் பருவமழையை பொருத்தே
உள்ளது. நம்மிடம் தேவையான அளவு மட்டும் உணவு தானிய இருப்பு உள்ளது. உபரியாக இல்லை.
இது கவலை அளிக்க கூடிய விஷயம்.
அடுத்துவரும் பருவமழை தவறினால்,
இதன் பாதிப்பு பங்குச் சந்தையிலும் இருக்கும் என்று தெரிவித்தார். இதே கருத்தை
எதிரொலித்த சிடி ஈக்யூட்டி ரிசர்ச் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் அகர்வால்
கூறுகையில், புது வருடத்தில் பங்குச் சந்தை, முதலீட்டாளர்களுக்கு அதிக வருவாயை
கொடுக்காது. 2008 இல் ஏற்பட்ட சரிவுடன் ஒப்பிடும் போது, இந்த வருடம் உயர்ந்துள்ளது.
இதே போல் 2010 ஆம் ஆண்டிலும் இருக்கும் என்று எதிர்பார்கக் கூடாது என்று கூறினார்.