புதுடெல்லி, மார்ச். 10: மத்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியாவுக்கு நடப்பு நிதி ஆண்டில் ரூ. 5,400 கோடி நஷ்டம் ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரஃபுல் படேல் தெரிவித்தார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலமாக அவர் அளித்த பதிலில், 2009௰ம் நிதி ஆண்டில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ. 5,400 கோடி நஷ்டம் ஏற்படும். இந்த நஷ்டம் மேலும் சில ஆண்டுகள் தொடரும். கடந்த மூன்று நிதி ஆண்டுகளில் ஏர் இந்தியாவுக்கு ஏற்பட்ட ஒட்டு மொத்த நஷ்டம் ரூ. 13,174.16 கோடியாகும்.
2007-08ம் நிதி ஆண்டில் ரூ. 2,266.16 கோடியும், 2008 09 ம் நிதி ஆண்டில் ரூ. 5,548 கோடியும் இந்நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நிறுவனத்தின் நஷ்டம் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத் தொடரும் என்ற விவரத்தை அளிக்காமல், நஷ்டம் மேலும் சில ஆண்டுகள் தொடரும் என்று பதிலளித்தார் படேல். சிக்கன நடவடிக்கைகள் காரணமாக ரூ. 753 கோடி சேமிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.