கம்பாலா, மார்ச். 3: ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கென்யா எல்லையில் உள்ள மவுண்ட் எல்கன் அருகே புதுதா மாவட்ட கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த மாவட்டம் மலைகளால் சூழப்பட்டது. எனவே, நிலச்சரிவு மிகவும் கடுமையாக இருந்தது. இங்குள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மண்ணுக்குள் புதைந்தன.நிலச்சரிவில் சிக்கி 83 பேர் உயிரிழந்தனர். 320 பேரை காணவில்லை. அவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை. எனவே, சாவு எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
இந்த தகவலை மந்திரி முசாஎக்வே தெரிவித்துள்ளார். இப்பகுதி கிராமங்களில் இருந்த பெரும்பாலான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாயின. அதுமட்டுமின்றி மனிதர்களுடன் சேர்ந்து ஆடு, மாடுகளும் மண்ணுக்குள் உயிருடன் புதைந்து விட்டன. மீட்பு நடவடிக்கையில் போலீஸ் மற்றும் ராணுவத்தினரின் உதவியுடன் செஞ்சிலுவை சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர்