போர்ட் ஆப் பிரின்ஸ், மார்ச். 03: ஹெய்தியில் பூகம்ப சோகம் இன்னும் தீராத நிலையில், பலத்த மழையின் காரணமாக 13 பேர் பலியாயினர். ஹெய்தியில் கடந்த ஜனவரி 12ம் தேதி பயங்கர பூகம்பம் தாக்கியதில் அதிபர் மாளிகை உள்ளிட்ட கட்டடங்கள் தரைமட்டமாயின. மூன்று லட்சம் பேர் இந்த பூகம்பத்தில் பலியாயினர்.
நிவாரணப் பணிகள் இன்னும் முழுமையடையாத நிலையில், இந்த நாட்டை, மீண்டும் ஒரு சோகம் தாக்கியுள்ளது.பலத்த மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தலைநகர் போர்ட் ஆப் பிரின்சிலிருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லெஸ்கேயஸ் நகரம் இந்த மழையில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அருகில் உள்ள கேவிலோன், செயின்ட் லூயிஸ் டூசுட் பகுதிகளில் மழை மற்றும் வெள்ளத்தால் 13 பேர் பலியாகியுள்ளனர்.