ஆலக்குடி, மார்ச். 8: ஆலக்குடியில் சுகவாழ்வு ஆரோக்கிய நிலையத்தின் சார்பாக 100வது உலக மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தஞ்சை மாவட்டம் ஆலக்குடியில் இயங்கக் கூடிய சுகவாழ்வு ஆரோக்கிய நிலையமும், நல ஒளி சுகாதார அமைப்பும் இணைந்து 100வது உலக மகளிர் தினத்தன்று ‘சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி'யை நடத்தி சிறப்பாக கொண்டாடியது.
இந்த நிகழ்ச்சியில் ஆலக்குடி பஞ்சாயத்து தலைவர் ராமரத்தினம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர்கள் சரஸ்வதி அசோகன், சாந்தி சின்ராசு, திமுக மகளிர் அணித் தலைவி வளர்மதி அன்பழகன் ஆகியோர் தலைமையில் விழா நடந்தது. 100வது மகளிர் தினம் குறிந்த விழா தலைவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

நிகழ்ச்சியில் சுகாதார குறித்த விழிப்புணர்வை வில்லுப்பாட்டு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளின் மூலம் நலஒளி அமைப்பினர் எடுத்துக் கூறினர். மேலும் மருத்துவ முகாம் அமைத்து நோய் முன்தடுப்பு, நோய்களை கண்டறிந்து மேல் சிகிச்சை அளிப்பது குறித்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
மேலும் சுகவாழ்வு ஆரோக்கிய நிலையம் பொதுமக்களுக்கு குளோரின் பற்றியான விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு, நல ஒளி சுகாதார அமைப்பிடம் குளோரினை வழங்கி அதனை ஆய்வு செய்து பொதுமக்களுக்கு வழங்குவதற்கான திட்டத்தையும் ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்