பெரம்பலூர்: துவரை பயிரை தாக்கும் காய் துளைப்பான் நோய் பரவாமல் தடுப்பது குறித்து பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வெ. ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் தற்போது பயிரிடப்பட்டுள்ள துவரை பயிர் பூ மற்றும் காய் முற்றும் பருவத்தில் உள்ளது. இதனிடையே, இந்தப் பயிரில் காய் துளைப்பான்கள் தாக்குதல் பரவலாகக் காணப்படுகிறது.
இந்தப் புழுக்களின் தாக்குதலினால் மகசூல் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, இதைக் கட்டுப்படுத்த ஒரு ஹெக்டேருக்கு 12 என்னும் அளவில் இனக்கவர்ச்சி பொறி வைக்க வேண்டும். பறவைகள் உட்கார டி வடிவிலான குச்சிகளை ஒரு ஹெக்டேருக்கு 50 நடவும்.
மேலும், 2 சத வேப்பண்ணெய் (100 லிட்டர் தண்ணீருக்கு 2 லிட்டர் வேப்பண்ணெய்) 5 சத வேப்பங்கொட்டை (5 கிலோ 100 லிட்டர் தண்ணீரில்) கரைசலை தெளிக்கவும். டைக்குளோர்வாஸ் 500 மி.லிட்டர் அல்லது எண்டோசல்பான் 1000 மி.லிட்டர் அல்லது தயோடிகார்ப் 500 கிராம் அல்லது இன்டாக்சோ கார்ப் 500 மி.லிட்டர், ஸ்பினேசாட் 4 சத மி.லிட்டர் இதில் ஏதாவது ஒன்றை 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
மேலும், விவரங்களுக்கு வேளாண்மை உதவி இயக்குநர்கள் மற்றும் வேளாண்மை அலுவலர்களை அணுகவும் எனச் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.