ஒரு மனிதன் அமைதியை இழந்துவிட்டால் அவன் எடுத்துவைக்கும் எந்த
முயற்சியிலும் வெற்றி அடைவது என்பது மிகவும் கடினமானது. மகிழ்ச்சியும், நிம்மதியுமே
வாழ்க்கையின் லட்சியம். அமைதியை இழந்தால் மகிழ்ச்சியும், நிம்மதியும் நம்மை விட்டு
வெகுதூரத்திற்கு சென்றுவிடும்.
வாழ்க்கையில் பலருக்கும் இந்த உண்மை தெரிந்திருக்கும். பிறர் உங்களை காரணமின்றி
திட்டுவதாகவும், குறை கூறுவதாகவும் உங்களுக்கு தோன்றி இருக்கலாம். அது உண்மையாகவோ
அல்லது மாறாகவோ இருக்கலாம். எப்படி இருந்தாலும் சிக்கலான காலக்கட்டத்தில் அமைதியுடன்
இருந்து பொறுமையாக சமாளியுங்கள். அப்போது அமைதியின் சக்தியை நீங்கள் உணருவீர்கள்.
பிறகு அதன் பலனை அனுபவிப்பீர்கள்.
அமைதியை இழப்பதே கோபம். துன்பத்தின் ஆரம்பம். பலவீனமானவர்களுக்கே சீக்கிரம் கோபம்
வரும் என்பது உண்மைதான். உங்களின் மீது கோபத்தை கொட்டுவதையே குறியாக இருக்கிறார்
என்பதை உணர்ந்தால் அங்கே நீங்கள் கண்டிப்பாக அமைதியாகத்தான் இருக்க வேண்டும்.
எங்கே சரியான புரிதல் இருக்கிறதோ, அங்கே கோபம் குறைந்துவிடும். அமைதி சூழ்ந்து
கொள்ளும். அமைதி கலையும் இடத்தை நன்றாக கவனித்துப் பாருங்கள். அங்கே எதிரெதிர்
கருத்துக்கள் தோன்றியதாலேயே ஆட்சேபணை உருவாகி கோபம் கொப்பளிக்கும். அமைதி கெடும்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்கள் கருத்து சரியாகவே இருந்தாலும் அதை வலியுறுத்த வேறு
தருணத்தை எதிர்பார்த்து நீங்கள் அமைதி காப்பதே அறிவுடைமை. உங்களுக்கு கோபமூட்டும்
தருணங்களில் நீங்கள் சரியான புரிதலோடு அமைதி அடைவீர்களானால், அந்த அறிவுடைமையானது
உங்களது நெருங்கிய சுற்றத்தாரான மகிழ்ச்சியையும், நிம்மதியையும் நிலைத்திருக்க
வைக்கும் என்று இங்கு பொருள் கொள்ளலாம்.
எனவே எல்லோர் முன்னிலையிலும் பணிவுடன் இருங்கள். எந்த நிலைமையிலும் அடக்கமாக
இருங்கள். அனைவரிடமும் அன்பு செலுத்தவும், வாழ்வில் உங்களை தடுமாற வைக்கும் இத்தகைய
சம்பவங்கள் எப்போது வேண்டுமானாலும் குறுக்கிடலாம். அப்போது உங்களுக்கு விருப்பமான
செயலில் மனதை லயிக்கச் செய்யுங்கள்.